யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் இன்று விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் விடுதலைப்புலிகளின் படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூவருக்கும் பிணை வழங்க சட்டமா அதிபர் பரிந்துரைத்தமைக்கு அமைய, தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம், அந்தச் சட்டத்தின் கீழ் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில சட்டவிதிகள், அவசரகாலச் சட்டம், அரசியல் – சிவில் உரிமைகளுக்கான சர்வதேசப் பட்டயச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அரசியல் – சிவில் உரிமைகளுக்கான சர்வதேசப் பட்டயச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்குப் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்குக் கிடையாது என்பதால் அதனை மீளப்பெற்றுக்கொண்டு ஏனைய 3 குற்றச்சாட்டுக்களிலும் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணை வழங்கும் அறிவுறுத்தல் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் கோப்பாய் பொலிஸ் அதிகாரிக்கு சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது.

இந்த விடயம் சட்டமா அதிபர் அலுவலகத்தால் நேற்று மாலையே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று காலை முற்படுத்தப்பட்டனர். கோப்பாய் பொலிஸ் அதிகாரி சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தமது அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பித்தார்.

இதனை ஆராய்ந்த நீதிவான் மாணவர்கள் இருவரையும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் விடுவித்தார். அத்துடன், வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்