ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை காப்பாற்ற முயற்சித்த முக்கிய அமைச்சர்! உண்மையை வெளிபடுத்திய இராணுவ தளபதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கரிசனை கொண்டிருந்ததாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்ட போது, அவரை விடுவிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிசாத் பதியுதினுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக இராணுவ தளபதியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இராணுவ தளபதி, சந்தேக நபர் தொடர்பாக அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தெஹிவளையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் மூன்று தடவைகள் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

குறித்த சந்தேக நபரின் பெயரை குறிப்பிட்டு அவர் தொடர்பில் விசாரித்தார். முதற்தடவை அழைப்பை ஏற்படுத்திய போது அது பற்றி தெரியவில்லை, விசாரித்து சொல்வதாக சொன்னேன். மீண்டும் இரண்டாவது தடவையும் அமைச்சர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். அதன்போது பார்த்துச் சொல்வதாக சொன்னேன்.

மூன்றாவது முறையும் அமைச்சர் தொடர்பு கொண்டார். அப்படி ஒருவரை கைது செய்துள்ளோம். அவர் ஒன்றரை வருடங்களுக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. ஒன்றரை வருடங்களின் பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் தகவல் சொல்வதாக சொன்னேனன்.

தெஹிவளையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வெளியிட இராணுவ தளபதி மறுத்துள்ளார்.

அமைச்சர் ரிசாத் பதியுதினுக்கு எதிரான இன்று நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. அதில் அமைச்சருக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் இராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமையும் ஒன்றாகும்.

இது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது இராணுவ தளபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்