அமெரிக்காவுடன் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த இலங்கை விருப்பம் – மோர்கன்

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று (வியாழக்கிழமை) வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் கலந்துரையாடல் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐந்து அமெரிக்கர்கள் உயிரிழந்த உயிர்த்த ஞாயின்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இந்த சந்திப்பின்போது கூறியுள்ளார்.

குண்டுவெடிப்புகளையடுத்து அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு இலங்கை விரும்புவதாக தெரிவித்ததாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்