ஒருவரின் விடுதலைக்காக ரிஷாத் 3 தடவைகள் அழைப்பெடுத்தார்! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

“ஒருவரின் விடுதலைக்காக மூன்று தடவைகள் எனக்கு அழைப்பெடுத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்யுமாறு அவர் கோரினார். ஒன்றரை வருடம் கழித்து என்னுடன் பேசுமாறு நான் அப்போது அவரிடம் கூறினேன்.” – இவ்வாறு தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உங்களுடன் பேசி ஒருவரை விடுதலை செய்யக் கேட்டார் எனக் கூறியுள்ளீர்கள்.. அது வேண்டுகோளா? அழுத்தமா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் வழங்கி இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது:-

“அது அழுத்தமா, வேண்டுகோளா என்பதைப் பார்த்தால் என்னிடம் விடுத்த வேண்டுகோளாகவே அதனைப் பார்க்கலாம்.தெஹிவளையில் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் விடுதலை சம்பந்தமானது. அது யார்? எவர்? என்ன செய்யலாம்? என்று அவர் மூன்று தடவைகள் அவர் எனக்கு அழைப்பெடுத்துப் பேசினாலும் மூன்றாவது தடவை பேசும்போது – என்னுடன் ஒன்றரை வருடங்கள் கழித்துப் பேசுமாறு நான் கூறிவிட்டேன். ஏனெனில், கைதுசெய்யப்பட்டவரை ஒன்றரை வருட காலம் வரை சிறையில் வைக்க சட்டத்தில் எனக்கு இடமுண்டு” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்