ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்!

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை நடாத்தி வருவதாக வவுனியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.

இந்த குற்றங்கள் உட்பட பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்வர வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 817 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

நேற்று காலை வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அருகில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலை முதல் பிற்பகல் 4 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளுக்கு ஊடகவியலாளர் சுமந்திரன் நீர் ஆகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் போது கருத்துத்தெரிவித்த வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒருவரான கா.ஜெயவனிதா மற்றும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் சங்கம் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் என்போர் இது தொடர்பில் தமத ஆதங்கங்களை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அரச புலனாய்வாளர்கள் கண்காணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்