மீண்டும் ஒரு கறுப்பு யூலையினைத் தோற்றுவித்து இலங்கையின் அமைதிச் சூழலுக்கு ஒரு சிலர் பங்கம் விளைவிக்கின்றனர்-எம்.இராஜேஸ்வரன்

இந்நாட்டில் மீண்டும் ஒரு கறுப்பு யூலையினைத் தோற்றுவித்து இலங்கையின் அமைதிச் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சிலர் திரை மறைவில் இயங்கி வருவதாக அறிய முடிகின்றது. இத்தகையோர் யாராக இருப்பினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கம் உண்டு.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காயத்திரி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தற்போதைய சூழ்நிலை குறித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில்,

கடந்த முப்பது வருட காலமாக யுத்தத்தின் வலியை எமது தமிழ் மக்கள் நன்கு உணர்ந்தவர்கள். ஆயிரக்கணக்கான உயிர்களை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் இன்னும் பல இழப்புக்களையும் சந்தித்தவர்கள் எமது தமிழ் மக்கள் எமக்கு ஏற்பட்ட இத்தகைய கொடூரங்கள் இன்னும் ஒரு இனத்திற்கு ஏற்படக்கூடாது. இந்நாட்டில் அமைதியான சூழலும் மக்களுக்கான பாதுகாப்பும் இன ஐக்கியமும் நீடித்து நிலைக்க வேண்டும். இதனையே சமாதானத்தை விரும்புகின்ற அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்வர்.

ஒரு சில சுயலாப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளும் ஏனையோரும் இந்நாட்டில் நிலவிய அமைதிச் சூழலை சீர் குலைக்க முற்பட்டனர். இத்தருணத்தில் பொலிஸாரும் முப்படையினரும் உளவுத்துறையினரும் விரைந்து செயற்பட்டனர். இதனையிட்டு நாம் அவர்களை பாராட்ட வேண்டியுள்ளது. குறிப்பாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் போராளி நிரபராதி என்பதை நிருபிப்பதற்கும் வழி பிறந்தது. இவருக்கு அரசாங்கம் வெகு விரைவில் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இதே வேளை விசாரணைகள் எதுவும் இன்றி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி முன்வர வேண்டும் என்று இத்தருணத்தில் உருக்கமான கோரிக்கையினை முன்வைக்கின்றேன். இதே வேளை எமது தமிழ் மக்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை அறிந்தால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸாருக்கு அறியக் கொடுக்க வேண்டும். அத்துடன் வதந்திகள் பரவும் போது உண்மைத் தன்மையினை அறிந்து நிதானமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும். இத்தருணத்தில் அனைத்து மக்களும் பொறுமைகாத்து விரும்பத்தகாத இத்தகைய தீவிரவாதச் செயலை முறியடிக்க உறுதி பூண வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்