தாக்குதல்களும் வன்செயல்களும் அரசியல் நோக்கத்திற்காகவே அரங்கேற்றப்பட்டன – சிவசக்தி ஆனந்தன்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பன அரசியல் உள்நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்களே பொறுப்பு கூற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர் பரஞ்சோதி எனப்படும் உதயனின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதன் பின்னர் வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் அரசியல்வாதிகளே காரணம். அரசியல் உள்நோக்கத்திற்காகவே இவை அரங்கேற்றப்பட்டன. இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே அரசாங்கமும், தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களுமே இவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்