வலுவிழந்த சட்ட கட்டமைப்பு அடிப்படைவாதிகளை பலப்படுத்தியது: துமிந்த

நாட்டில் ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு இல்லாது போனமை அடிப்படைவாதிகளுக்கும், நாட்டை சீரழிக்க விரும்பியவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்;டை நிர்வகிக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்திலேயே உருவாக்கப்பட்டன. ஆனால் 1948ஆம் ஆண்டிலிருந்து இச்சட்டம் முறையாக சீர்த்திருத்தப்படாமை பாரிய குறைபாடாகக் காணப்படுகிறது.

இவ்வாறாக நாட்டில் வலுவான சட்ட கட்டமைப்பு இல்லாது போனமை அடிப்படைவாதிகளுக்கும், நாட்டை சீரழிக்க விரும்பியவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த பின்னர் பல கட்சிகள் நாட்டை ஆட்சி செய்துள்ளன. அதில் நாமும் உள்ளடங்குகிறோம். அவ்வாறாக எம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய விடயமே தவறவிடப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாது தவிர்ப்பதற்கு, நாடாளுமன்றத்தில் சட்டங்கள் சீர்த்திருத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகிறோம்.

இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம். எனவே, இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்து நாட்டில் உள்ள சட்ட விதிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதுமாத்திரமின்றி புதிய சட்டங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பில் ஏதேனும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டியிருப்பின் அம்மாற்றங்களை செய்வதே எமது முக்கிய நோக்கம்.

இன – மத ரீதியில் பாகுபடாத வகையிலான பொதுச் சட்டமொன்று நாட்டில் காணப்பட வேண்டியது அவசியமாகும்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்போது அவர்களுக்கான தனிப்பட்ட சில சட்டங்களைக்கூட பொது சட்டமாக மாற்ற வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கினார்.

அதிலிருந்து நாட்டிற்குள் ஒரு பொதுச் சட்டம் காணப்பட வேண்டும் என்ற விடயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது புலனாகிறது” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்