மதுபான விருந்தில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் மரணம்; இருவர் படுகாயம்!

லுணுகம்வெஹர – பெரலிஹெலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் பெரலிஹெலப் பகுதியில் நேற்றிரவு மதுபான விருந்தை ஏற்பாடு செய்திருந்தபோதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்று, மீண்டும் வருகை தந்து துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 28 மற்றும் 39 வயதான நபர்கள் லுணுகம்வெஹர மற்றும் பன்னேகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்