ரிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித்தலைவர்களை சந்திக்கிறார் சபாநாயகர்!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குட்படுத்தும் திகதி தொடர்பாக முடிவெடுக்கும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், 10 குற்றச்சாட்டுகளுடன் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய திகதியைதான் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. செவ்வாயன்று இது குறித்து விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியனவே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளாகும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின்போது வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.

பிரேரணையை தோற்கடிப்பதற்கான சாதாரண பெரும்பான்மையை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருக்கவில்லை.

அத்துடன், அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இரண்டை நிலைப்பாட்டிலேயே இருந்துவருகின்றனர்.

எனவே, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அமைச்சர் ரிஷாட்டுக்கான அங்கீனிப்பரீட்சையாகவே கருதப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்