தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவோம்: முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் ஜெரமி கோர்பின் உறுதி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, அடுத்த தொழிற்கட்சி அரசாங்கம், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த முன்னின்று செயற்படும் என்று அதன் தலைவர் ஜெரமி கோர்பின் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாய் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்றாகும். அதனை முன்னிட்டு தொழிற்கட்சி தலைவர் விடுத்துள்ள செய்தியில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் இடம்பெறும் இச்சந்தர்ப்பம் மிகவும் துன்பகரமானதென குறிப்பிட்டுள்ள ஜெரமி கோர்பின், 10 வருடங்களாகியும் நீதி கிடைக்காமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமுமே நீடித்த, நிலைத்த சமாதானத்திற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இன்னும் இலங்கையில் தொடர்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஜெரமி கோர்பின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்தங்களை பறிகொடுத்த மக்களுக்கு இன்றைய நாளில் ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளை, தொழிற்கட்சியின் ஆட்சியில் இலங்கை மக்களுக்கான சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தம் பிரயோகிக்கப்படும் என தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்