வெசாக் பண்டிகையை மக்கள் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர் – சாகல

வெசாக் பண்டிகை குறித்து பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய, பல்லேகம பகுதிகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மூன்று தினங்களுக்கு முன்னர்தான் நான் கொழும்பிலிருந்து கிராமத்திற்கு வந்தேன். என்றும் இல்லாதவாறு மக்களிடத்தில் ஆர்வம் உள்ளமையை புரிந்துகொண்டேன்.

கொழும்பில் இந்த வெசாக் பண்டிகை காலத்தில் தோரணங்களை அமைக்கவும் உற்சவங்களை ஏற்பாடு செய்வதற்கும் பொதுமக்கள் தயாராகி கொண்டிருக்கின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அதேபோன்று, கிராமப் பகுதிகளுக்கு வந்த போதும் அதே நிலைமையை காணக்கூடியதாக இருந்தது. தெனியாய நகரம், பல்லேகம நகரம் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு அலங்கரித்திருக்கிறார்கள். அதனைச் சார்ந்த கிராமங்களிலும் வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே. வெசாக்கை முன்னிட்டு நடைபெறும் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் இந்த முறை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.

இராணுவத் தளபதியும் பொலிஸ்மா அதிபரும் எமது பாதுகாப்பு தொடர்பாக கூடிய நம்பிக்கையை வைத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தார்கள். எமக்கு என்றவுடன் அது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும்தான் அந்த பாதுகாப்பு.

இந்த வெசாக்கை நன்றாக கொண்டாடுங்கள், பாதுகாப்பு நல்ல முறையில்தான் இருக்கின்றது. அதேபோன்று, சாதாரண நமது அன்றாட பணிகளை ஆரம்பிப்போம். வெசாக் காலத்தில் மாத்திரமன்றி ஏனைய நாட்களிலும் பொதுவான பணிகளில் ஈடுபடுவோம்.

எனவே, வெசாக் கொண்டாட்டங்களிலும் அன்னதானம் போன்ற புண்ணிய காரியங்களிலும் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்