இராணுவத்தால் அச்சுறுத்தல் – சபாநாயகரிடம் முறையிடவுள்ளார் ஸ்ரீதரன்

இராணுவத்தினர் தனது வாசஸ்தலத்தை சோதனைக்கு உட்படுத்தியமை தனக்கு அச்சுறுத்தல்விடும் செயலென்றும் இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தான் முறையிடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச நாடாளுமன்ற அமைப்பிற்கும் இந்த விடயம் தொடர்பாக தான் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் வாசஸ்தலம் நேற்று இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தான் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்விற்காக சென்றிருந்த சமயம், இராணுவத்தினர் தனது வீட்டினை சுமார் 3 மணித்தியாலங்கள் சோதனை செய்ததாக தனது மனைவி குறிப்பிட்டதாக தெரிவித்தார். அத்தோடு தனது மகனின் அரை அதிக நேரம் சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சாரதியினுடைய வீட்டையும் இராணுவத்தினர் சோதனை செய்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனவே, தனது வீட்டையும் தன்னுடன் தொடர்புடையவர்களையும் இவ்வாறு சோதனைகளுக்கு உட்படுத்துவது தனக்கு அச்சுறுத்தல் விடும் செயற்பாடாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்