சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை அமைச்சரை அகற்றும் முயற்சியை ஆதரிக்க முடியாது- வே. இராதாகிருஷ்ணன்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என அக்கட்சியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்தோடு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதலில் குரல் கொடுப்பவன் தானே என்றும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் சுதந்திரபுரம் வீடமைப்பு திட்டத்தில் 30 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  ”அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தலைமையிலான  உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகும்.

அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றவர்களின் சதித் திட்டமாகவே இதனை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது. சிறுபான்மை கட்சிகளும் சிறுபான்மை மக்களும் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அவர் மீது குற்றம் இனங்காணப்படும் பட்சத்தில் அதற்கு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க தயாராக இருக்கின்றேன்.

அதைவிட்டு வெறுமனே வதந்திகள் மூலமாகவும் ஆதாயத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்துடனும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்