வெளியாகிறது சஹரானின் DNA அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசீமின்  மரபணு பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகவுள்ளது.

அதன்படி குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிசோதனைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹரானின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக, அவரின் சகோதரி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகளை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், குறித்த தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்