சிறைச்சாலைகளை நிரப்புவது எனது நோக்கமல்ல – ஜனாதிபதி

சிறைச்சாலைகளை நிரப்புவது தனது நோக்கமல்ல என்றும் அனைத்து பிரஜைகளையும் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்துவதே தனது நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

26 பெண் கைதிகள் உள்ளிட்ட 762 சிறைக்கைதிகள் இன்று விடுதலை பெற்றதோடு, தன்னிடமிருந்து விடுதலை கடிதங்களை பெற்றுக்கொண்ட சிறைக்கைதிகளிடம் அவர்களின் விபரங்களையும் ஜனாதிபதி கேட்டறிந்தார். இந்த விடுதலையினூடாக தத்தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று விடுதலை பெற்றவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்குள் வருவதை தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் விடுதலை பெற்ற அனைவரினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் விடுதலை பெற்றவர்களிடையே சுயதொழிலில் ஈடுபட விரும்பும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் கண்டறிந்து அது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் துரிதமாக தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி  பணிப்புரை விடுத்தார்.

சிறைக்கைதிகளை சிறந்த பிரஜைகளாக சமூகமயமாக்குவது குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அதற்கமையவே, தன்னை கொலைசெய்ய முயன்று நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை கடந்த 2016ஆம் ஆண்டு விடுதலை செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டினுள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமையும் சமூக பின்புலத்தை மாற்றியமைப்பதே தனது நோக்கமாகுமெனத் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் இருந்தவாறே சமூக விஞ்ஞான முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து களனி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச் சண்டை மெய்வல்லுனராக முடிசூட்டிய ஒருவரும் விடுதலை செய்த ஜனாதிபதி, இவ்வருட தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியிலும் கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் பணிப்புரை விடுத்தார்.

பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்விற்கு ஜனாதிபதி ஒருவர் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பதுடன், 762 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட விடுதலை செய்யப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்