சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை செவ்வாய்க்கிழமை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது.இது சம்பந்தமான பரிசோதனை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.சஹ்ரானின் மரபணுவை பரிசோதனை செய்ய அவரது மனைவி மற்றும் மகளின் இரத்த மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டது.மரபணு தகவல்கள் உள்ளடங்கிய முழுமையான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் மூன்று பிரதான ஹோட்டல்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்தனர்.

தற்கொலை தாக்குதல் நடத்திய நபர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றை கொண்டு இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் பரிசோதனைகளை ஆரம்பித்தது.கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் அலாவுதீன் அஹமட் முவாத் என்பவர் என மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய, புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் அச்சி முஹம்மது ஹஸ்துன் என்பவர் எனவும் தெரியவந்துள்ளது.ஷெங்கீரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் சஹ்ரான் ஹசிம் மற்றும் இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் என தகவல்கள் கிடைத்தன. இதனை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன் அந்த அறிக்கையை பகுப்பாய்வு திணைக்களம் செவ்வாய்க்கிழமை கையளிக்க உள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்