சிறுபான்மை மக்களை காப்பாற்ற முடியாத மைத்திரி உடனடியாக ஜனாதிபதி பதவியை துறத்தல் வேண்டும் தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து முஸ்லிம்களை பாதுகாப்பார் என்று பகிரங்க வாக்குறுதி வழங்கி சென்று 24 மணித்தியாலங்களுக்கு இடையில் முஸ்லிம் சகோதர இனத்தவர்களை இலக்கு வைத்து காடையர்களின் தாக்குதல்கள் தென்னிலங்கையில் இடம்பெற்றன, இவரால் சிறுபான்மை இனத்தவர்களை காப்பாற்ற முடியாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது, எனவே இவர் உடனடியாக பதவி விலகுதல் வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

சங்கத்தின் மாதாந்த கூட்டம் தலைவரின் காரைதீவு இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. கூட்டத்தை தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்திலும், அதற்கு பின்னரும் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காகவும், காயப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்ற அன்பர்களுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அதே நேரத்தில் இத்தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் அவரே பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். உள்நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி அவரே பாதுகாப்பு அமைச்சர் ஆவார். மேலும் தனிப்பட்ட விசுவாசி ஒருவரையே பாதுகாப்பு செயலாளராக நியமித்து இருந்தார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் குண்டு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்களை வழங்கி இருந்தன. ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக, அசமந்தமாக நடந்து விட்டார்.

அவர் வெளிநாட்டில் இருந்தார் என்று சொல்லி நழுவ முடியாது. பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மீது பழியை போடுவதன் மூலமும் பிரதமர், அரசாங்கம் ஆகியோரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதன் மூலம் அவர் தப்பித்து கொள்ள முடியாது. இக்குண்டு தாக்குதல்களின் பின்னணியில் பிரதமரோ, அரசாங்கமோ பதவி விலக வேண்டிய தேவை கிடையாது. உண்மையில் பதவி விலக வேண்டியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேதான் ஆவார். இதை வெளிப்படையாக உரத்து சொல்வதில் எமக்கு பயமோ, தயக்கமோ கிடையாது.

ஏனென்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட இவர் சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழர்களின் வாக்குகள் மூலமாக வெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக்ஸவின் கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எமது தொழிற்சங்கமும் முன்னின்று அப்போது இவருக்கே ஆதரவு வழங்கியது. நாம் இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டு நடக்கின்றார். இவர் காரணமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முடங்கி கிடக்கின்றன. அரசியல் தீர்வு எட்டப்படும் என்பது இவரின் ஆட்சியில் இனி எட்டாக்கனியே ஆகும். சிறுபான்மை மக்கள் எதிர் கொள்கின்ற அவலங்கள் தொடரவே செய்கின்றன. உள்நாட்டிலும் புதிய குழப்பங்கள் என்றும் இல்லாதவாறு உருவாகி உள்ளன. இவர் ஒரு பலவீனமான தலைவராக உள்ள ஒரேயொரு காரணத்தாலேயே எமது நாடு பயங்கரவாத தாக்குதல்களுக்கு இப்போது பலிக்கடா ஆக நேர்ந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து முஸ்லிம்களை பாதுகாப்பார் என்று பகிரங்க வாக்குறுதி வழங்கி சென்று 24 மணித்தியாலங்களுக்கு இடையில் முஸ்லிம் சகோதர இனத்தவர்களை இலக்கு வைத்து காடையர்களின் தாக்குதல்கள் தென்னிலங்கையில் இடம்பெற்றன. எனவே இவரை ஆளுமை அற்ற தலைவராகவே நாம் பார்க்க வேண்டி உள்ளது.

இவரால் இந்நாட்டின் மக்க்களை குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களை காப்பாற்ற முடியாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. இவர் ஜனாதிபதி பதவியை தொடர்வதற்கான அருகதையை இழந்து விட்டார், எனவே இவர் உடனடியாக பதவி விலகுதல் வேண்டும். இதே நேரத்தில் எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் வந்தாலும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஆதரவு வழங்கும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்