ரிஷாட்டின் பதவி விலகல் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் தெரிவித்த கருத்து!

கடந்த மாதம் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த தொடர் தற்கொலைத் தாக்குதலையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் பொலிஸாரும் முப்படையினரும் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சில அமைச்சர்களின் வீட்டிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் வர்த்தக அமைச்சாரான ரிஷாட் பதியுதீனின் வீட்டிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாத செயல்களுக்கு துணைபுரிந்தார் என்ற சந்தேகத்தில் அவருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் அவர்கள் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் தற்காலிகமாக பதவியில் இருந்து விலகினால் இப்போதைய பிரச்சினைகளை சமாளிக்கலாமெனவும் தெரிவித்திருந்தனர்.

ரவி கருணாநாயக்க, திலக் மாரப்பன ஆகியோர் முன்னர் இராஜினாமா செய்தது போல ரிஷாட்டும் இராஜினாமா செய்ய வேண்டுமென தீர்மானித்தனர். இந்தக் கோரிக்கை பின்னர் பிரதமர் ரணிலிடம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை உடனடியாக நிராகரித்தார் ரணில் .

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலோ அல்லது வேறு எந்த குற்றங்களோ ரிஷாட் மீது முன்வைக்கப்படாத நிலையில் அவர் பதவி விலகத் தேவையில்லை என்று ரணில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்