மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் ரிஷாட்டிற்கு இடமில்லை: ரோஹித

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எந்தக் காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்போவதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே ரோஹித அபேகுணவர்த்தன இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘‘எந்தக் காரணம் கொண்டும், ரிஷாட் பதியுதீனை எமது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள மாட்டோம். நாம் எப்போதும் சரியான நிலைப்பாட்டில்தான் தொடர்ந்தும் இருந்துக்கொண்டிருக்கிறோம்.

எமது நிலைப்பாட்டில்தான் எமது கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் இருக்கிறார்கள். நாம் அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் குறைக்கூறவில்லை.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த அரசாங்கம் அழுத்தம் விடுத்து வருகிறது.

நாம் இந்த விடயத்தில் அனைவரையும் அழைத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கூட கதைத்துள்ளோம். ரிஷாட் பதியுதீனின் அமைச்சுப் பதவியை பறிக்கும் நோக்கம் எமக்கில்லை. ஆனால். அவர் அமைச்சராக இருப்பதால்தான் ஒரு வாக்குமூலத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

அரசாங்கத்தின் செயற்பாட்டால்தான் நாம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம்.  அத்தோடு, ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரவுள்ளது.

இதுதொடர்பில் நாம் புதன்கிழமை இடம்பெறும் எமதுக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது கலந்துரையாடுவோம். ஜே.வி.பி. உண்மையாகவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையைத் தான் கொண்டுவருகிறதா அல்லது இதன் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா என்பதை ஆராய்ந்தே  ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்போம்” என ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்