ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் கூட்டமைப்பு சம்பந்தன் அறிவிப்பு

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கும். இந்தநிலையில், இந்தப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துவரும் கருத்துக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” – இவ்வாறு இன்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் பொது எதிரணியினரால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அதை ஆதரிக்க வேண்டும் எனவும், இல்லை அதை எதிர்க்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இவ்விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கும். எனவே, அவசரப்பட்டு எதனையும் கூற நான் விரும்பவில்லை. அமைச்சர் ரிஷாத்தும் பிரேரணை தொடர்பில் என்னுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அவருக்கும் இந்தப் பதிலையே நான் கூறியுள்ளேன். இந்தநிலையில், பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அந்தக் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்; அவை கட்சி சார்ந்த உத்தியோகபூர்வ கருத்துக்கள் அல்ல” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்