ரிஷாட்டை காப்பாற்ற அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் பதிலளிப்பார்கள்: சார்ள்ஸ்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உரிய முறையில் கையாளாமல் அவரைக் காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தெரிவுக்குழுவின்மூலம் கொண்டுசெல்வதா அல்லது நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு வாக்கெடுப்புக்கு விடுவதாக என்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்த சார்ள்ஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சராக இருக்கும் போது விசாரணைகளை சரியாக மேற்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்ட சார்ள்ஸ், ஆகவே நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விவாதம் நடத்தி நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

சுமார் 300 பேரின் பரிதாப இறப்பில் ஒரு அமைச்சரை காப்பாற்ற முயற்சித்தால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என சார்ள்ஸ் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு கோரியமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

64 பேரின் கையெழுத்துக்களுடனான குறித்த பிரேரணை கடந்த 16ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்