வெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதிநிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்

வெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டில் இருந்து இங்கு வந்த அகதிகளை வன்னி மாவட்டத்தில் குடியமர்த்த அல்லது தங்க வைக்க முயற்சிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் இந்த அகதிகளைப் பொறுத்த வரையில் சிலர் பாகிஸ்தான் நாட்டில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடகாகவும், ஊடகங்கள் ஊடாகவும் அறிய முடிகிறது.

இவர்களை குடியமர்த்தி இதனூடாக வன்னி மாவட்டத்தில் இருக்கும் இந்த அமைதியான நிலையை கெடுக்க முயல்வதை வன்மையாக கண்டிக்கின்றோம். வன்னி மாவட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு சென்ற அகதிகள் இங்கு வந்துள்ள நிலையில் அவர்களுக்கான வசதிகள் அல்லது வாழ்வாதாரம் கூட சரியான முறையில் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் பிறிதொரு நாட்டு அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியமர்த்த முயற்சிப்பது அல்லது தங்க வைக்க முயற்சிப்பது ஒரு மோசமான செயல் என நான் பார்க்கின்றேன்.

இந்த அகதிகளை கொண்டு வந்தமை தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் அவர்களிடம் கேட்ட போது எதுவும் தெரியாது என்கின்றார். மேலதிக அரச அதிபருக்கே தெரியவில்லை என்பதால் சந்தேகம் எழுகிறது.

அத்துடன், கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு வன்னி மாவட்டத்தில் பாரியளவில் ஒரு பேசும் பொருளாக மாறியிருக்கின்றது. இந்தக் குண்டுவெடிப்பினூடாக முதலிலே இறந்துபோன 350ற்கும் அதிகமானவர்களுக்கும் இக்குண்டு வெடிப்பிற்குப்பின் பெரும்பான்மை இனத்தவர்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குமான ஜனநாயக மக்கள் காங்கிரசின் அனுதாபங்களை முதலில் தெரிவித்து கொள்கின்றோம்.

குண்டுவெடிப்பின் சூத்திரதாரியும் பலரும் இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி 99வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கின்றார். கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்களா? அல்லது அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்களா? அல்லது அரசியல் ரீதியான ஒரு தாக்கம் பாதுகாப்புப்படையினருக்கு இருந்ததா? என்பது பற்றி இன்று சந்தேகம் எமது மக்கள் மத்தியிலே எழுகின்றது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு பல முஸ்லிம் அமைச்சர்கள் ஆதரவாக இருந்திருக்கின்றார்கள் என்பது மிகவும் மன வேதனை அளிக்கின்றது.

ரிசாத் பதியூதீனை ரணில் விக்கிரமசிங்க காப்பாற்ற முயற்சிக்கின்றார் என்பது தெட்டத் தெளிவாக நாட்டு மக்களுக்குத் தெரிகின்றது. சிங்கள மக்கள் இதனை தற்போது சரியான முறையில் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். கிழக்கிலே ஆளுநர் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுடன் தொடர்புகள் பற்றி பாரியளவிலே ஊடகங்களிலேயும் தெரிவித்திருக்கின்றார்கள். தற்போது நிரூபிக்கப்பட்டிருந்தும் கூட அவர்கள் இருவருக்கு எதிராகவும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதிருப்பதைப் பார்க்கும் போது எமது ஜனாதிபதி அவர்கள் ஹிஸ்புல்லாவை காப்பாற்ற முயற்சிக்கின்றார் என்ற செய்தி எமது நாட்டு மக்களுக்கு தெட்டத் தெளிவாக தெரிந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தார்கள் என பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். நேரடியாக இந்தப் பயங்கரவாதிகளுக்குத் துணைபோன இந்த இரண்டு அரசியல் வாதிகளுக்கும் எவ்விதமான விசாரணைகளும் இல்லாமல் இருப்பதை பார்க்கும் போது அரசியல் வாக்கு வங்கிக்காக எமது தாய் நாட்டை விற்பதற்கு தயாராகி இருக்கும் அரசியல் தலைவர்களாக இந்த இரண்டு தலைவர்களையும் நான் பார்க்கின்றேன்.

எமது நாடு சிங்கள தமிழ், மொழி நாடு இரண்டு மொழிக்கான நாடாக இருந்து கொண்டு, புரியாத மொழியான அரபு மொழி பதாதை ஏன் நிறுவப்படுகிறது. இங்குள்ள முஸ்லிம் மக்களுக்குக்கூட அதனை புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு மொழியான அரபு மொழியிலேயே பல இடங்களில் பதாதைகள் பொறிக்கப்பட்டுள்ளதை எங்களால் காணக்கூடியதாக உள்ளது. இன்று அல்லாகு அக்பர் என்று சொல்லிக்கொண்டு மனித படுகொலைகள் செய்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே கோழிகளை, ஆடுகளை, மாடுகளை வெட்டுவதற்கு தான் அல்லாகு அக்பர் என்று சொல்வார்கள். இன்று மனிதர்களை படுகொலை செய்வதற்கு அந்தப் பெயர்களைப் பாவித்திருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. இஸ்லாமியர்கள் தமிழ் முஸ்லிம்கள் என்ற காலம் மாறி, முஸ்லிம்கள் அரபுமொழி ஆதிக்கத்தை செலுத்தி எமது நாட்டிற்குள் அரேபியக் கலாச்சாரத்தை கொண்டு வந்ததினால் தான் இன்று முஸ்லிம்கள் பிறிதொரு பிரிவினர் என்ற மமதையை உருவாக்கி வைத்துள்ளது.

ஆகவே, இந்த அரேபியக் கலாச்சாரம் முற்றாக நிறுத்தப்படவேண்டும். வன்னி மாவட்டத்திலுள்ள அரபு மொழிகளிலே எழுதியுள்ள அனைத்து வாசகங்களும் முற்று முழுதாக அழிக்கப்படவேண்டும். இது சம்பந்தமாக நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனிடமும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம். எமக்குப் புரியாத, எமக்கு சம்பந்தமில்லாத அரபு மொழியிலுள்ள வாசகங்கள் நிச்சயமாக அகற்றப்படவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட இருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காப்பாற்றினார்கள். அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் அவரை காப்பாற்றியது. அந்த தருணங்களில் அரசியலமைப்பு மாற்றங்களை வெகு இலகுவாக செய்திருக்க கூடிய நிலைமைகளை கோட்டை விட்டுவிட்டு இன்று குண்டு வெடிப்பை காரணம் காட்டி தீர்வைப் பெற முடியவில்லை என்பது தமிழ் மக்களை ஏமாற்றி மீண்டும் வாக்கினைப் பெற்றுக் கொள்ளப் பார்க்கிறார்கள் எனத் தோன்றுகின்றது எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்