யாழ் மாநகர முதல்வருக்கும் – சுவிஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ் மாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளரும், அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் டெமியானோ ஸ்குய்ட்டமட்டி (Damiano Sguaitamatti) ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (22) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த சுவிஸ் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு முதல்வர் தற்போதைய யாழ் மாநகரசபையின் செயற்பாடுகள், மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், யாழ் மாநகரசபையின் புதிய கட்டிட வேலைத்திட்டங்கள், அமையவிருக்கின்ற யாழ் பிரதான பஸ்தரிப்பு நிலையம் மற்றும் வர்த்தகக் கட்டடத்தொகுதி தொடர்பான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

மேலும் உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் உட்பட பொருளாதார நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆய்வு ஒன்றை செய்து அதற்கான நடவடிக்கை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மாநகரசபையின் பௌதீக ரீதியான முன்னேற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த உயர்ஸ்தானிகரை இதற்கு முன்னர் இரு தடவை சந்தித்திருப்பதாகவும், குறித்த உயர்ஸ்தானிகர் நாட்டிலிருந்து பிறிதொரு பதவியின் பொருட்டு செல்லவிருப்பதாலேயே தன்னுடன் இச் சந்திப்பை நடாத்தியிருப்பதாக குறிப்பிட்ட முதல்வர், எதிர்காலத்தில் வரவிருக்கின்ற புதிய உயர்ஸ்தானிகரோடும் தன்னோடு வைத்திருந்த உறவை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் உயரஸ்தானிகர் முன்வைத்ததாக குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்