மகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்!

அண்மைய நாட்களாக சிறிலங்காவுக்குள் அமெரிக்கா பாரிய கடற்படைத் தளமொன்றை அமைத்து வருவதாகவும் அமெரிக்க படையினர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பாரிய ஆயுதங்களுடன் வந்து செல்வதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் இலங்கைக்கான அமெரிகத் தூதுவர் அலைனா பி டெப்ளிஸ்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்துக்கு சென்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்ன தேரரை சந்தித்திருந்தார்.இந்த நிலையில்

மகிந்த உட்பட்ட அவரின் கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அஸ்கிரிய பீட மகாநாயக்கருக்கு தூதுவர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை அமெரிக்கா எப்போதும் சிறிலங்காவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அடித்துக்கூறினார்.

இதனையடுத்து மற்றுமொரு பௌத்த தலைமைப் பீடமான மல்வது பீடத்துக்கும் சென்று சிறிலங்காவுக்குள் அமெரிக்க இராணுவத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று விளக்கமளித்தார்.

இதனையடுத்து வெளியில் வந்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்ளிஸ், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியினரும் அவருக்கு விசுவாசமான சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும் குற்றம்சாட்டும் பாதுகாப்பு ஒப்பந்தம் மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிட்டார்.

‘ கைப்பற்றுதல் மற்றும் இடைநிலை சேவை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆட்சியின் போது இணக்கம் காணப்பட்டு முதலில் கைச்சாத்திடப்பட்டது. இது ஒரு விநியோகத்துக்கான ஒப்பந்தமாகும். அதாவது எமது கப்பல்களை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு தேவையான விநியோகத்தை வழங்குவதற்காகவும் சிறிலங்காவின் தேவைகளுக்காகவும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளுக்காக இவ்வாறான ஒப்பந்தங்கள் நாடுகளுக்கிடையே கைச்சாத்திடுவது வழமையான நடவடிக்கையாகும். ஏனெனில் எமது படையினர் பிரவேசிக்க வேண்டிய தேவை ஏற்படும் ஒவ்வொரு தடவையும் பேசி இணக்கம் காண்பதற்கு செலவாகும் நேரத்தை கருத்திற்கொண்டு முன்கூட்டியே இவ்வாறான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன. அதேவேளை சிறிலங்காவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்துக்கு அமைய நாம் தொடர்ந்தும் கூட்டுப் படைப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். சிறிலங்காவின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிடடாக வேண்டும். அதேவேளை பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பிராந்தியத்தின் ஸ்திரத்திற்காகவும் கடற்பிராந்தியங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதியும் இருக்கின்றது’

இதேலேவளை சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் செய்திருந்த அதே காலப்பகுதியில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன்ன அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் சீன விஜயத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தவா சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அவசரமாக வொஷிங்டனுக்கு அழைத்தீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்கத் தூதுவர் டெப்ளிசிடம் வினவினார்.

‘வொஷிங்டன் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் எமது வெளிவிவகார செயலாளரான பொம்பேயோ மிகவும் பயனுள்ளதான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததை நாம் வரவேற்கின்றோம். இது வழமையான இருதரப்பு பேச்சுவார்த்தைகளாகவே அமைந்திருந்தன. சில மாதங்களுக்கு முன்னரே இந்த விஜயம் திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கமைய இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் இரு நாட்டுக்கும் முக்கியமான பல விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். அதேவேளை சிறிலங்கா என்பது இறைமையுள்ள ஒரு நாடு. அந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அதேவேளை அபிவிருத்திக்கும் பல நாடுகளின் உதவிகள் தேவைப்படும். அதனை சிறிலங்காவே தீர்மானிக்கும்’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்