இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

நாட்டில் ஏற்பாட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இனவாதக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதுடன், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கெதிராகவும் மேற்கொண்டு வரும் இனவாதக்கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும். அதையும் மீறி இனவாதக்கருத்துக்களைப் பரப்பி நிம்மதியாக வாழும் தமிழ், முஸ்லிம் இனங்களை மோத விட்டு அரசியல் செய்ய எத்தனிக்கும் பராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரனை அரசு கைது செய்ய வேண்டுமென கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுப்போன அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து முஸ்லிம்களும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு வகையில் நெருக்குவாரங்களை எதிர்கொண்டு வருகின்ற அதே வேளை, பல பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பொருளாதார, உயிரழிவுகள், வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல், கலாசார ரீதியான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்நாட்டில் சமாதனத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டிய மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் இனமுரண்பாட்டைத் தோற்றுவித்து வரும் எதிர்கால சதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
முஸ்லிம் அரசியல்வாதிகளை முழு நேரமாக விமர்சிப்பதும் முஸ்லிம் பிரதேசங்களில் அத்துமீறி நுழைந்து அதிகாரம் செலுத்த முற்படுவதுமாகும்.
தொடர்ந்தும் பாராளுமன்ற உரைகளிலும் ஊடக அறிக்கைகளிலும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான அமைச்சர் றிஷாத் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோரை விமர்சித்து வருவதுடன், பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தியும் அறிக்கைகள் விட்டும், அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
கிழக்கு ஆளுநர் நியமனத்தை இனவாதமாக மக்கள் மயப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டு மூக்குடைந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தற்போது ஆளுநரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கெதிராக வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களைப் பரப்பி வருகிறார்.
இப்பல்கலைக்கழகம் தொடர்பில் நாட்டின் தலைமை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே தெளிவான அறிவிப்பொன்றை விடுத்துள்ள நிலையிலும், கோப் குழுவின் கள விஜயத்தின் பின்னரும் உண்மைகளை உணர்ந்து, யதார்த்தங்களை ஜீரணித்து இனவாத ரீதியான விமர்சங்களை கைவிட வேண்டும்.
அதே நேரம் தொடர்ந்தும் நாட்டின் சட்டத்தையும் மீறி இனமுறுகலைத் தோற்றுவிக்கும் நோக்கில் நடவடிக்கைளை முன்னெடுக்கும் பட்சத்தில், கைது செய்யப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் நாட்டில் மீண்டும் பயங்கரவாத நிலைமை ஒழிக்கப்படும்.
இவ்வாறான இனவாதம் பேசும் அரசியல்வாதிகள் தமிழினத்திற்கே சாபக்கேடு. இதனாலேயே அதனை உணர்ந்த தமிழ் அரசியல் தலைமை மதிப்பிற்குரிய ஆர்.சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை கட்சியை விட்டு நீக்கியுள்ளது பாராட்டத்தக்கது.
அதே நேரம், முஸ்லிம் அரசியல்வாதிகள் விமர்சிக்கும் இவர்களால் தமிழ் மக்களும் தமிழ் பிரதேசங்களும் கண்ட முன்னேற்றங்கள் தான் என்ன? என்று கேட்டால், பூஜ்ஜியமே.
அதே நேரத்தில், முஸ்லிம் அரசியவாதிகளால் தான் தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது என்பதை இனவாதம் பேசும் குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓயாது விமர்சிக்கும் தமிழ் அரசியல்வாதி வியாழேந்திரன் உணர்ந்து கொள்ள வேண்டும் .
மேலும், மட்டு மாவட்டத்தில் விகிதார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு காணி சரியான பங்கீடு வழங்கப்படாமல் அநீதியிழைக்கப்படுள்ள நிலையில், கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் காணி விடயங்களில் தேவையற்ற விதத்திலும் சம்பந்தமில்லாமலும் மூக்கை நுழைத்து எஞ்சியுள்ள சிறு நிலப்பரப்பினையும் கையகப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஈடுபட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.
கல்குடா முஸ்லிம் பிரதேசத்திலுள்ள மக்கள் போதியளவு குடிப்புக்காணி இன்மையால் சுகாதார மற்றும் பல்வேறு வகையில் பல அசெளகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இவ்வாறான தலையீடுகளை மேற்கொண்டு அவைகளையும் கையகப்படுத்தி இப்பிரதேச முஸ்லிம்களுக்கு நெருக்குவாரங்களைக் கொடுக்க முனைவதை  இனி மேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய ஆர்.சம்பந்தன் ஐயா அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் போன்றோரும் முஸ்லிம்களின் விடயத்தில் யதார்தங்களைப் புரிந்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரனின் கருத்துக்கும் முன்னெடுப்புக்களும் மனவேதனையளிப்பதாகவுள்ளது என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல்.அஸ்மி வெளியிட்ட அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்