ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள்

“ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாதகாலத்துக்கு ஒத்திப்போடும் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகி அதற்கு ஆதரவாக வாதிடவோ வேண்டாம்.”

– இவ்வாறு புதிய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவைக் கோரியிருக்கின்றார் தேசிய நாட்டுப்பற்று இயக்கத் தலைவரான வண. எல்ல ஞானவன்ஸ தேரர்.

இது தொடர்பாக சட்டமா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவற்றின் சாராம்சம் வருமாறு:-

“தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களில் – அதாவது இந்த வருட முடிவில் முடிவடைகின்றது என்பதை ஏற்கனவே ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றம் தனது ஆசோலனை நியாயாதிக்க அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கிய பரிந்துரையில் தெட்டத் தெளிவாகத் தெரிவித்து விட்டது.

அப்படி இருந்தும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்கு அரசமைப்பின் 129ஆம் பிரிவின் கீழ் ஒரு முயற்சி எடுக்கப்படுகின்றது என அறிகின்றோம்.

அரசமைப்பில் ஏதேனும் விடயத்தில் தெளிவற்ற நிலை இருந்தால் மட்டுமே அது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய இந்தப் பிரிவின் கீழான ஆலோசனை நியாயாதிக்கத்தைப் பயன்படுத்தித் தமக்கு வழிகாட்டல் ஆலோசனையை வழங்கும்படி ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தைக் கோரலாம்.

ஆனால், இந்த விடயத்தில் அரசமைப்பு ஏற்பாடுகள் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உள்ளன. அவற்றுக்கு ஆலோசனை கேட்க வேண்டிய தேவையை இல்லை. ஆகையால், இந்த விடயத்துக்கு ஆலோசனை வழங்கவோ, தவறான கருத்துக்களை உயர்நீதிமன்றத்தில் தோன்றி வழங்கவோ வேண்டாம் எனக் கோருகின்றேன்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்