இராணுவத்தை கொண்டு தொழிலாளர்கள் அச்சுறுத்தல்!- பதுளையில் போராட்டம்

தொழிற்சங்க ரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்சனைக்கு இராணுவத்தினரின் ஊடாக தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அதிகாரியை இடமாற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதுளை, லெஜார்வத்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே குறித்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, “குறித்த தோட்டத்தில் மரங்கள் வெட்டப்பட்டு புதிதாக அமைக்கபட்ட கொங்ரீட்  வீதியூடாக கொண்டு செல்லப்படுகின்றமையால்  அவ்வீதியும் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஆகையால் இவ்வீதியை திருத்தம் செய்து தருமாறு கோருவதற்காக தோட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஊடாக தொழிலாளர்கள் சிலர், தோட்ட அதிகாரியை சந்தித்தனர். இதன்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தோட்ட அதிகாரி, இராணுவத்தினரை அழைத்து அவர்களின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இவ்வாறு அநாகரிகமான செயற்பாட்டில் ஈடுபட்ட அவரை உடனடியான இடமாற்றம் செய்ய வேண்டுமென கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்

மேலும் போராட்டத்தின் போது அதிகாரியின் உருவ பொம்மைக்கு எரியூட்டப்பட்டதுடன் வீதியை மறித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் அதிகளவான தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்