வவுனியா வர்த்தகருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்கள் மீது பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவிலுள்ள பிரபல்யமான வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவருடைய பெயரைப் பயன்படுத்தி ஆதாரமற்ற அவதூறான தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரத்தை கூட்டத்தில் விநியோகித்த வவுனியா நகர பிரபல பாடசாலை பழைய மாணவர்கள்  இருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வர்த்தகரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பழைய மாணவர்கள் நேற்று (27.05) பொலிசாரால் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதற்கு மன்னிப்புக் கோரியதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும், அவதூறான தகவல்களையும் உள்ளடக்கிய துண்டு பிரசுரம் ஒன்றை சிலர் விநியோகித்ததாக நேற்று (27.05) பொலிஸ் நிலையத்தில் குறித்த வர்த்தகரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிசாரால் அத்துண்டுப்பிரசுரத்தினை வெளியிட்ட பாடசாலையின் பழைய மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணையை முன்னெடுத்திருந்தனர். .தன்போது பழைய மாணவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்திற்கு மன்னிப்புக் கோரியதுடன், தனக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதால் இவ்வாறான துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் குறித்த வர்த்தகருக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் எந்தவித நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் உறுதியளித்தார்.

பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர், பாடசாலையின் பழைய மாணவர்களினால் இனிவரும் காலங்களில் குறித்த வர்த்தகரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது என உறுதி மொழி வழங்கியதையடுத்து துண்டுப்பிரசுரம் வெளியிட்ட பழைய மாணவர்களை எச்சரித்து பொலிசார் விடுவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக் கிழமை நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பழைய மாணவர்கள் இருவரினால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிய துண்டுப்பிரசுரத்திலேயே குறித்த வர்த்தகரின் பெயரை பயன்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்