மாவை ஒரு மாபெரும் சரிதம்! பாகம் – 5

‘கொடி பிடித்தவர்கள், கொம்பிழுத்தவர்கள்’ எல்லாம் தம்மைப் போராளிகள் என்றும் அரசியல் பிரமுகர்கள் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கையில், என்றைக்கும் போல ஆரவாரமின்றி இருக்கும் ஒரு பெரும் சரித்திரம் மாவை.சோ.சேனாதிராஜா. முகப்புத்தகப் பதிவுகளுக்காகவும், மேடை முழக்கங்களுக்காகவும் தமிழ்த் தேசியம் பேசும் பலரிடையே சிறுவயது முதலே மூர்க்கமான போராட்ட குணமும், தீர்க்கமான தமிழ்த் தேசியச் சிந்தனையும் கொண்ட ஒருவர் தழிரசுக் கட்சியின் தலைவரான மாவை. சோ.சேனாதிராஜா.

தனது சிறு பராயம் முதல் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டு, அதற்கெதிராகப் பல போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு சிறை சென்று, பல இன்னல்களை அனுபவித்த அவரிடம், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திய போது, வழக்கம் போல சிரித்தபடியே மறுத்து விட்டார். ஆனாலும், நாங்கள் விடுவதாயில்லை. ‘ஐயா, இது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல, நாளைய நமது சந்ததிக்காக’ என்றோம். உடன்பட மறுத்தாலும், நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டமையின் பேரில் உடன்பட்டுக் கொண்டார்.


இற்றைக்கு 62 வருடங்களுக்கு முன்னரே – தமிழ் இயக்கங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அவரது அடக்கு முறைக்கெதிரான பயணம் ஆரம்பித்திருக்கிறது. அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி அவருடன் அளவளாவியதன் வெளிப்பாடாக அவரது மொழி நடையில் ‘மாவை ஒரு மாபெரும் சரித்திரம்’ தொடரின் ஐந்தாவது பகுதி இந்த இதழில் வெளிவருகிறது.

திருமலை உவர்மலைப் போராட்டத்தால் விமானப்படை ஆக்கிரமிப்பைத் தடுத்ததில் எமக்கெல்லாம் பெரும் சந்தோசம் இன்று உவர்மலை திருமலைக் கடலின் வட எல்லையில் தமிழர் குடியிருப்புக்களும் தமிழர் தளமுமாக ஆயிரம் தமிழக் குடும்பங்கள் வரை வாழ்கின்றன.

இந்தக் கட்டுரைத் தொடரின் முன்னைய பாகத்தில் வெளியாகிய படத்தில் 1977 ஏப்ரல் 13 இல் போகம் பரையிலிருந்து விடுதலை பெற்று வெளிவந்த போது மாவை சேனாதிராசா வளர்ந்த தலைமுடியுடனும், தாடிகளுடனும் தோற்றமளிக்கிறார். அருகில் அண்ணன் காசியானந்தன், சிறி சபாரத்தினம், இணுவில் இராஜகுல சூரியர் ஆகியோரும் காணப்படுகின்றனர் என்று மாவை. சேனாதிராஜா அடையாளப்படுத்தினார்.

அந்த நேரத்தில் ‘ட்ரயல் – அட் – பார்’ நீதிமன்றத்தில் நீதிபதிகளின் தீர்ப்பில் அந்த வழக்கின் குற்றக் கூண்டில் நின்றவர்களைக் கைதுசெய்வதற்கு ‘அரசு அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகாது’ என்ற தீர்ப்புத்தான் விடுதலை பெறுவதற்குக் காரணம்.

அவசரகாலச்சட்டம் செல்லுபடியாகாது என வாதிட்ட வர்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும், இராணி அப்புக் காத்துமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் முதன்மையானவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அண்ணர் அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம்,  கா.பொ.இரத்தினம், கே.துரைரத்தினம் ஆகியோர் அந்த வழக்கில் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தனர். 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘ஐரோப்பியரிடம் இழந்த சுதந்தி ரத்தை மீட்டு தமிழீழத்தை நிறுவுவது’ என்பது தான் அத் தீர்மானம்.


அதற்கு முன் 1972 இல் மே22 இல் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பை யாழ் மாவட்ட செயலகத்தில் தமிழரசுத் தலைவர்கள்; எரித்தனர். நாமும் அங்கிருந்தோம்.
‘ட்ரயல் – அட் – பார்’ நீதிமன்றில் அந்த வழக்கில் மூத்த இராணி அப்புக்காத்து, சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் சட்டத் தரணிகள் 67பேர் நீதிமன்றில் முன்னிலையாகினார்கள். இராணி அப்புக்காத்து மு.திருச்செல்வம் அரசமைப்புக்கள், தமிழ்த் தேசிய இனத்துக்;குரிய இறைமை ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரத்தை மீட்கும் தமிழர் உரிமை பற்றிப் பல நாள்களாக வாதாடினார். அவை சிறந்ததொரு வரலாற்று ஆவணம்.

போகம்பரைச் சிறையிலிருந்த எமக்கு சிறைக்கொடு மைகளை மறந்து வழக்கின் வாதங்களைத் தினமும் பத்திரிகைகளைப் படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் சனி, ஞாயிறு கிழமைகளில் அப்பத்திரிகைத் துணுக்கு களைக் கொண்டு வருவார். முருகன் கோவில் மண்ட பத்தில் எம்மிடம் பேசுவார். அறிவும் ஆறுதலும் கிடைத்து வந்தது.

அதைவிட ஜவகர்லால் நேரு, இந்தியச் சிறையிலிருந்த போது மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் ஆங்கில – தமிழ் அகராதியையும் வைத்துக் கொண்டு இரவிரவாகப் படிப்பேன்.

தற்போது யாழ் பல்கலையில்; விரிவுரையா ளராயிருக்கும் வீரமங்கையின் தந்தையார் நல்லதம்பி விஜயரட்ணம், பாடசாலை அதிபர் எனக்கு அனுப்பி வைத்த அற்புதமான வரலாற்றுப் பெட்டகம்.

நான் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவனாய் முதுமாணிப்பட்டம் பெறப் பெரும் உதவியாகவும் அரசியல், உலக நாடுகளின் விடுதலைப் போராட்டங்களைப் பாடமாகவும் என் மனதிற்கு அறிவிற்குப் பெரும் பயனாகவும் இருந்தது.

1976 ஓகஸ்ட் 05 ஆம் திகதி உலக நாடுகளின் தலைவர்கள்; கொழும்பில்; நடைபெற்ற அணிசேரா மாநாட்டிற்கு வந்திருந்த காலம். அந்த நேரத்தில்,’தமிழ் மக்கள் இனப்பிரச்சினையை முன்வைத்து நாம் ஜனநாயக வழிகளில் போராடியவர்கள் நீண்ட காலமாகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை பற்றியும், தமிழர்களின் அரசியல் நிலைமை பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் – சிறைக் கூடங்களினுள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்’ என்று அறிவித்தோம்.

எமது போராட்டத்துக்கு ஆதரவாக வெளியில் இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடா ளுமன்ற முன்றிலில் உண்ணாவிரதப் போரில் ஈடு பட்டார்கள் என அறிந்தோம்.

நாங்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததும் பிரதமர் சிறிமாவோவின் வேண்டுகோளில் தசநாயக்கா என்ற அதிகாரி எம்முடன் பேசுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

அவர் போராட்டத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினார். அணிசேரா மாநாடு முடிந்ததும் விடுதலை செய்வதாகத் தெரிவித்தார். நாம் அதற்கு இணங்க மறுத்துவிட்டோம்.

ஒன்றாக இருந்த எம்மை தென்னிலங்கையில் வௌ;வேறு சிறைகளுக்கு அனுப்பிவிட்டார்கள்;. காசி ஆனந்தனை காலிச்சிறைக்கும், வண்ணை ஆனந்தனை அநுராதபுரத்திற்கும், சத்தியசீலன், அல்போன்ஸ் மேரி ஆகியோரை நீர்கொழும்புக்கும், என்னை கண்டி ராஜவீதிச் சிறைக்கும் மாற்றிவிட்டனர். நாங்கள் கூட்டமாக இருப்பதனாலேயே பலமாக இருக் கிறோம் என்று அரசு கருதியது.

ஏனைய கைதிகளையும் வேறு இடங்களுக்கு அனுப்பி விட்டனர். போகம்பரையில் மருத்துவரை நியமித்து எம்மை பரிசோதித்து வந்தனர். நாங்கள் நீரும் உப்பும் மட்டும் எம் அறையில் வைத்திருந்தோம். சில இடங்களில் சிங்களக் கைதிகளின் அச்சுறுத்தல்களும் இருந்தன. நாம் எமக்குள்ளே அணிசேரா மாநாடு முடியும் காலத்தில் உண்ணாவிரதத்தைத் தொடர்வது பற்றிப் பரிசீலிப்போம் என்றும் எண்ணியதுண்டு.

உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண் டாவது வாரத்தில் பலவந்தமாக மூக்கின் வழி தொண் டையூடாக நீர்ப்பதார்த்த உணவு குழாய் மூலம் எல் லோருக்கும் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இரு கைகளையும் இருபக்கமாக படுக்கைக் கட்டிலில் பிணைத்து விடுவார்கள்.

ராஜ வீதியில் சிறைக்குள்ளேயும் நான் யோகாசனம் தலைகீழாக நின்று பயிற்சி செய்வேன். ஒரு வாரத்தின் பின் ஒரு நாள் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. எனக்கு நியமித்த ஓர் இளம் சிங்கள மருத்துவர் எனக்கு குழாய் மூலம் உணவு செலுத்த வேண்டாமென்று சிபார்சு செய்துவிட்டார். அதனால் நான் தப்பித்துக் கொண்டேன்.
ஒரு பக்கத்தில் அணிசேரா மாநாடு நிறைவடைந்து விட்டது. உண்ணாவிரதிகளில் பலருக்கு மூக்கு வழியாக நல்ல நீராகாரம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். உண்ணாவிரதம் என்னைத் தவிர ஏனையோர் கைவிட வேண்டி வந்துவிட்டது.

21 நாள்களில் காசியானந்தனுக்கு உடலில் பல இடங்களில் கொப்பளங்களாகி நிணம் வரத் தொடங்கி விட்டது. பார்க்க வருபவர்கள், இளைஞர்கள் கண்ணீர் விட்டனர்.அந்த நேரத்தில், தந்தை செல்வா எம்மைப் பார்க்க வரப்போகிறார் என்ற செய்தி எமது காதுகளை எட்டியது. நாம் வேண்டாம் என்றோம். நானும் மிகப் பவீனப்பட்டுவிட்டேன். படுத்த படுக்கை.

தந்தை செல்வாவிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. ‘நீங்கள் உயிருடன் எம் மக்களுடனிருந்து விடுதலைக்கு உழைக்க வேண்டும். உண்ணா நோன்பைக் கைவிடுங்கள்’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தார்.சுதந்திரன் பத்திரிகை உட்பட ஏனைய பத்திரிகைகள் அனைத்தும் எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்திகளைத் தாங்கின.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த எங்களைச் சிறைக்காவலர்கள், மருத்துவர்கள் வாகனங்களில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். எல்லோரும் ஏற்கனவே தீர்மானித்தவாறு ஒன்றாகப் பேசி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டோம்.

அன்பர்கள், ஆதரவாளர்கள் பழரசம் தந்தார்கள். குரல் வந்தது, கொஞ்சம் பேசினோம். கிறிஸ்தவ மதகுருமாரும் ஏனைய பலரும் பார்க்க வந்தார்கள். கண்ணீர் விட்டுக் கலங்கிப் போனார்கள். ஆனாலும் சிறிமாவோ வாக்குறுதி தந்தவாறு விடுதலைசெய்யவில்லை. ட்ரயல் – அட் – பார் நீதிமன்றத் தீர்ப்பினால் 1977 ஏப்ரல் 13 இல் தான் அரசு எம்மை விடுவித்தது.

1972 மே 22 சிறீமாவோ பிரதமர் தலைமையில் புதிய அரசமைப்புக்கு எதிரான போராட்டங்கள். தமிழ்ப் பிரதேசங்களுக்கு வருகை தரும் அமைச்சர்களுக்கு எதிராக தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கறுப்புக் கொடி, பொது வேலை நிறுத்தப் போராட்டங்கள். ஆனால், நிதியமைச்சர் என்.எம்.பெரேரா 09-03-1973 யாழ்.வந்த காலம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எமக்கெதிராக அரசு உளவுத்துறை, காவல்துறையை ஏவிவிட்டது. 09.03.73 அதிகாலை நான் கைது செய்யப்பட்டுவிட்டேன். பிரதமர் சிறீமாவோ யாழ் வந்தபோது தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

1972 அரசமைப்புக்கொதிரான போராட்டங்கள் தமிழர் வாழும் இடமெல்லாம் ஆரம்பித்து விட்டன. தமிழரசு, கூட்டணிக்கு எதிரானவர்களும் குறிப்பாகப் பலதரப்பட்ட இளைஞர்களும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

1972 ஜூன் 25 ஆம் திகதி கோப்பாயில் கூட்டணிப் பொதுச் சபைக் கூட்டம். இளைஞர் பேரவைப் பிரதிநிதியாக நான் இருந்தேன். எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறக்கத் தேவையில்லை. காங்கேசன்துறைத் தொகுதி பிரதிநிதி தந்தை செல்வநாயகம் மட்டும் பதவி விலகினால் போதும் என்று வாதிட்டேன். வீ.என்.நவரத்தினம் ஆமோதித்தார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் எமது போராட்டங்கள் இடையிடையே வன்முறைகளும் இடம்பெற்றன. ஊரடங்குச் சட்டம் பிரகடனங்கள் இடம்பெற்றன. கூட்டங்கள் நடத்தமுடியாத நிலை ஏற்படும் என்பதால் உயர் மட்டக்குழு ஒன்று அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. தந்தை செல்வா, அண்ணர் அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம்,கதிரவேற்பிள்ளை, காசி ஆனந்தன், கரிகாலன் ஆகியோரோடு நானும் அந்தக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டேன். 09.03.1973 இல் நான் கைது செய்யப்பட்டமையால் அக் குழுவில் நான் செயற்பட முடியவில்லை.

25.06.1972 அன்று கூட்டம் முடிந்ததும் தந்தை செல்வநாயகம் அவர்களை அவர் தெல்லிப்பழை வீட்டில் விடுவதற்காக அமிர் அண்ணர் வாகனத்தில் நாங்கள் கூட்டிச் சென்றோம். அப்பொழுது ஊரடங்கு. தந்தை செல்வா, அமிர் அண்ணர், திருமதி மங்கையர்க்கரசி, ஆகியோரோடு நானும் அவர் வீட்டிற்குச் சென்றோம்.
தந்தை செல்வா என்னைப் பார்த்துச் சொன்னார்,’நீங்கள் சொன்னபடி நான் நாடாளுமன்றத்திலிருந்து விலகத் தீர்மானித்து விட்டேன்;. ஆனால், அரசாங்கம் உடன் தேர்தலை நடத்தமாட்டாது என்று தான் நினைக்கின்றேன்’ அவ்வாறு தான் நடந்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கேசன்துறையில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலில் 25000 இற்கும் அதிகமான வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார் தந்தை செல்வா.

1977 ஏப்ரல் 13 நாம் விடுதலை பெற்று வந்தோம். தொடர்ந்து கூட்டணியால், இளைஞர்களால் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் பல இடம்பெற்றன. ஆனால், அக்காலத்தில் ஆனா செனவிரத்தின பொலிஸ்துறை தலைமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்திலிருந்தே திரும்பிச் சென்று விட்டார். யாழ் – கண்டி வீதியெல்லாம் போராட்டத்தில் மக்கள்.

அந்தப் போராட்டத்தில் பங்குகொள்ள வந்த என்னை ‘இப்பொழுது தான் சிறையிலிருந்து வந்தீர்கள். நீங்கள் இப்போராட்டத்திற்கு வரவேண்டாம்’ என்று அமிர் அண்ணர் கூறி யாழ். கண்டி வீதியில் கூட்டணி அலுவலகத்தில் நிறுத்தி விட்டார்கள்.

1977 ஏப்ரல் 26ஆம் திகதி தந்தை செல்வா சுகவீனமுற்று யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் எங்களை விட்டு – தமிழ் மக்களை விட்டு – உலகத்தை விட்டுப் பிரிந்து விட்டது. அந்த நேரத்தில் அண்ணர் அமிர்தலிங்கம் உட்படப் பலரும் வைத்தியசாலையில் உடனிருந்தனர்.
இலங்கையின் 1978 புதிய அரசமைப்பு செப்ரெம்பர் 7 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படவிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த விமானம் கொழும்பில் வெடிகுண்டு வெடிப்புக்குள்ளானது.’1978 புதிய அரசமைப்பை எதிர்க்கிறோம். சுதந்திரத் தமிழீழத்தைக் கோருகிறோம்’ என்ற கோசத்தோடு,1978 செப்ரெம்பர் 5 ஆம் திகதி அரசமைப்புக்கு எதிரான பேரணி, கூட்டம் என்பன மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றன.

செம்ரெம்பர் 7ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த புதிய அரசமைப்புப் பிரகடன விழாவுக்கு மட்டு. வின்சென்ட் கல்லூரி மாணவிகளை,’பான்ட்’ வாத்தியக் குழுவை ஏற்றிச் செல்ல மட்டு பேருந்து நிலையத்தில் ஆயத்தமாக இருந்த பேருந்துக்குள் குண்டு வெடித்தது.

மாணவிகள் காயமடைந்தனர். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் மாபெரும் கூட்டம். மட்டக்களப்புப் பொலிஸார் எம்மைக் கைது செய்ய வந்த பொழுது மக்களால் – இளைஞர்களால் – தடுக்கப்பட்டனர். செபரெம்பர் 05 ஆம் திகதி திட்டமிட்டபடி மட்டு மாநகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டிருந்தனர்.
மட்டு நடு நகரில் நான், காசியானந்தன், வேணுதாஸ் உள்ளிட்ட நூற்றியைம்பது பேர் கைது செய்யப்பட்டோம். மட்டு பொலிஸ் நிலையம் பெருமளவில் நிறைந்துவிட்டது. எங்கும் மக்கள், இளைஞர் நிரம்பியிருந்தனர். எல்லா இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள், அரச அலுவலகங்கள் பூட்டப்பட்டன. போக்குவரத்தும் இல்லை. மிகப் பெரிய போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. நாம் மட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.
தொடரும்………

– காலிங்கன் –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்