மோடி அரசு பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமருக்கு ‘வெட்டு!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நரேந்திர மோடி மீண்டும் இன்று பிரதமராகப் பதவியேற்கின்றார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதியேற்கின்றார்கள். இந்தப் பதவியேற்பு விழாவில் பங்குபற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இந்த விழாவில் பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நோபளம், பூட்டான், கிர்கிஸ்தான், மொரீஷியஸ் உள்ளிட்ட 14 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியவை வருமாறு:-

“நாடாளுமன்ற தேர்தலின்போது பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் பிரசாரம் முழுவதும் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றது. இத்தகைய உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளது.

இது எதிர்பாராதது. இத்தகைய பிரச்சினையில் இருந்து இந்தியா விரைவில் விடுபடும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர நட்புறவுடன் திகழ வேண்டும் எனப் பிரதமர் இம்ரான் கான் விரும்புகின்றார். எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சிக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இப்பிராந்தியம் வளர்ச்சி பெற காஷ்மீர், சியாசின் மற்றும் சர்கிரீக் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும். இதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” – என்றார்.

கடந்த தடவை – முதல் முறையாக 2014இல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது அந்நிகழ்வில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்