மக்களின் பூரண ஆதரவாலேயே தீவிரவாதத்தை குறுகிய காலத்தில் முறியடிக்க முடிந்தது – கட்டளைத் தளபதி

தீவிரவாதத்தை குறுகிய காலத்தில் முறியடிக்க மக்கள் பூரண ஆதரவை வழங்கினர் என கிழக்கு மாகாண பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், தீவிரவாதத்தை முறியடிப்பதில் கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவும் பாதுகாப்புத் தரப்புக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூர் நகர சபையும், ஏறாவூர் சன சமூக நிலையங்களின் ஒன்றியமும் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பாதுகாப்புத் தரப்புக்கு மிகப்பெரிய சவாலாகவும் அமைந்த நிகழ்வொன்றை கடந்த  ஏப்ரல் 21இல் எதிர்கொண்டோம்.

மிகச்சொற்ப தொகையினரான ஒரு குழுவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து நடந்த நிகழ்வுகளின் மூலம் இதனை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

இது எமக்கு சவாலாக இருந்தாலும், நாம் குறுகிய நாட்களுக்குள் வெற்றிகரமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

குறிப்பாக இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எமக்கிருந்தது. கிழக்கில் முஸ்லிம்கள் பிரதானமாக வாழும் பிரதேசங்களில் தீவிரவாதிகளை முறியடிப்பதற்காக முஸ்லிம் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்தது. இது இயல்பு நிலையைக் கொண்டுவர ஆதரவாக இருந்தது.

முப்படையினரும், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நாட்டின் குடிமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாட்டின் பாதுகாப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவோம்.

சோதனை நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் நாம் கரிசனையுடன் செயற்பட்டு அத்தகைய அசௌகரியங்களையும் நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்