அமைச்சர் தயாகமகேவுடன் முதல்வர் ஆனல்ட் விசேட கலந்துரையாடல்

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ தயாகமகே அவர்களுடன் விசேட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் மேற்கொண்டார்.

நேற்று (2) புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமூர்த்தி முத்திரைகளை வழங்கி வைப்பதற்காக பிரதமர் தலைமையில் யாழிற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சருடனே முதல்வர் இக் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அமைச்சருடனான இக் கலந்துரையாடலில் முதலவர் கருத்துரைக்கையில் ‘வெறுமனே சமுர்தி முத்திரைகளை மாத்திரம் வழங்குவதால் வறுமைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர் செய்து விட முடியாது. அவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களின் வியாபார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டிற்கும் – கே கே எஸ் இற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை மீள துரிதமாக ஆரம்பிப்பது தொடர்பிலும், பலாலி விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு’ குறிப்பிட்டார். அதற்கு அமைச்சர் இவை தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த முயறிச்ககும் என்று குறிப்பிட்டார்.

மேலும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் சிறு கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் உற்பத்திக்கான பொருட்களையும், உதவிகளையும் வழங்கும் வகையில் குறிப்பிட்ட விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விசேட நிகழ்ச்சித்திட்டத்திற்கான முன்மொழிவுகளை தாருங்கள் விரைவாக அது குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார். மேலும் மாநகர எல்லைக்குள் வீட்டு வசதிகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாது அல்லல்படும் மக்களுக்கு அவர்களின் காணி அளவுத்திட்டத்திற்கு ஏற்ப விசேட வீட்டுத்திட்டங்களை வழங்குமாறும், மாநகரை சுத்தமான பசுமை மாநகரமாக உருவாக்கும் எமது செயற்றிட்டத்திற்கு மரக்கன்றுகளையும் கோரியிருந்தார். இவை தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்