இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பரிதாபப் பலி ! நெடுங்கேணியில் சம்பவம்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

நெடுங்கேணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் இராணுவப் பொறுப்பதிகாரியின் வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

நெடுங்கேணிப் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி அதி வேகத்துடன் சென்ற இராணுவப் பொறுப்பதிகாரியின் ஜீப் வாகனம், நெடுங்கேணி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள பாதசாரி கடவைக்கு அண்மையாக சைக்கிளில் வந்த வயோதிபரை மோதித் தள்ளியுள்ளது . இதனால் குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

நான்கு பிள்ளைகளின் தந்தையான நெடுங்கேணி, சேனைப்புலவைச் சேர்ந்த 67 வயதுடைய கணபதிப்பிள்ளை பேரம்பலம் என்பவரே பலியாகியுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவப் பொறுப்பதிகாரியின் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக வந்தது என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்