வென்றது இலங்கை! – சுருண்டது ஆப்கானிஸ்தான்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.

இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. இதில் ஓரளவு ஓட்டம் சேர்த்த கருணாரத்ன 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய திரிமன்னே 25 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஒரு பந்து இடைவெளியில் குசல் மெண்டிஸ் 2 ஓட்டங்களிலும், அஞ்சலோ மத்யூஸ் ஓட்டம் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து முகமது நபியின் சுழலில் தங்களது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெயா டி சில்வா ஓட்டம் எதுவும் எடுக்காமலும், திசரா பெரேரா 2 ஓட்டங்களிலும், இசுரு உதனா 10 ஓட்டங்களிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுக்களை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் தொடக்க வீரராகக் களமிறங்கி தனது அரைச் சதத்தைப் பதிவு செய்த குசல் பெரேரா 78 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
33 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போட்டி 41 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

இறுதியில் இலங்கை அணி 36.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 4 விக்கெட்டுக்களும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும், ஹமித் ஹசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இருப்பினும் மழை காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ஓட்டங்கள் (41 ஓவர்கள்) இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷஷாத், ஹசரத்துல்லா ஷஷாய் ஜோடியில், ஷஷாத் 7 ஓட்டங்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 2 ஓட்டங்களும், ஓரளவு ஓட்டங்கள் சேர்த்த ஹசரத்துல்லா ஷஷாய் 30 ஓட்டங்களும் , ஹஸ்மத்துல்லா ஷாகிடி 4 ஓட்டங்களும், முகமது நபி 11 ஓட்டங்களும், கப்டன் குல்பதின் நைப் 23 ஓட்டங்களும், ரஷித்கான் 2 ஓட்டங்களும், தவ்லத் ஜட்ரன் 6 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜிபுல்லா ஜட்ரன் 43 ஓட்டங்களில் ‘ரன் அவுட்’ ஆனார். அவரைத் தொடர்ந்து ஹமித் ஹசன் 6(5) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் முஜிப்-உர்-ரஹ்மான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரதீப் 4 விக்கெட்டுக்களும், மலிங்க 3 விக்கெட்டுக்களும், உடானா, திசாரா பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்