ஐ.தே.க.விற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு – சமரசப் பேச்சில் மைத்திரி

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸ் சேவையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு என தனித்தனி அமைச்சு இருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் முரண்பட்டுக்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் பிளவுபட்டது.

இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு கீழ் சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை தக்க வைத்துக் கொண்டார். இதேவேளை ஊடக அமைச்சு பதவிக்கும் எந்த ஐக்கிய தேசிய கட்சியினரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் பரந்துபட்ட கூட்டணி தொடர்பிலான பேச்சுக்கள் சாதகமாக அமையாத நிலையில், அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் மஹிந்த அணியினருக்கு ஆதரவு கொடுக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரி நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் சமரச பேச்சுக்களின் ஒருபகுதியாக சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை வழங்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்