நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நோன்பு பெருநாள்!

நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களால் இன்று (புதன்கிழமை) நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று விசேட தொழுகைகள் இடம்பெற்றன.

அதற்கமைய யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

தொழுகையைத் தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசலின் நோன்புப் பெருநாள் விசேட உரை இடம்பெற்றது.

இந்த பெருநாள் தொழுகையில் யாழ். வாழ் முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் நகர்ப்புற முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், முஸ்லிம் வட்டாரம் சின்ன மொஹிதீன் பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அபூபக்கர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

அதேபோல வவுனியாவிலும் நோன்புபெருநாள் தொழுகை சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா தௌஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் திடல் தொழுகை வவுனியா பட்டானிச்சூர் குடா வயல் திடலில் இன்று காலை 05.06 மணிக்கு இடம்பெற்றது.

அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றன.

இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோல் புத்தளம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும் இன்று புனித நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

புத்தளம் கருப்புத் தரையிலும் பள்ளிவாசல்களிலும் மற்றும் தக்கியாக்களிலும் விஷேட பெருநாள் தொழுகை இன்று காலை அமைதியாக நடைபெற்றது.

இந்த விஷேட பெருநாள் தொழுகையில் அதிகளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு மலையகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று தொழுகைகள் நடைபெற்றன.

இதன் ஒரு கட்டமாக புஸல்லாவ ஜும்மா பள்ளிவாசலிலும் பள்ளிவாசலின் பிரதான இமாம் தலைமையில் தொழுகையும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

இதன்போது பெருமளவான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஹட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் பிரதான மௌலவி ஹஜூமல் தலைமையில் ஹட்டன் முஸ்லிம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்