முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி துறந்தமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி துறந்தமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,அமைச்சுப் பதவிகளைத் துறந்தமை மூலம் இனவாதிகளுக்கும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயலும் கும்பலுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

சரியான நேரத்தில் உரிய தருணத்தில் இந்தப் பாடம் புகட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற கொடூரத் தாக்குதல்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் மிகவும் வன்மையாகக் கண்டித்தனர்.ஏன் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரும் இந்த தாக்குதலைக் கண்டித்தனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். நாமும் இதில் உறுதியாக இருக்கின்றோம்.

அதேவேளை, தாக்குதலுடன் தொடர்புபடாத அப்பாவிகள் கைது செய்யப்பட கூடாது எனவும், அவ்வாறு கைது செய்யப்பட்ட அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் சமூகம் வலியுறுத்தி வருகின்றது. இது நியாயமானது.

இந்த நிலையில், தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மீதும், முஸ்லிம் ஆளுநர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

அதற்கிடையில், இந்த விவகாரத்தை இனவாதிகளும், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயலும் கும்பலும் கையிலெடுத்து நாட்டில் மீண்டும் ஓர் இனக்கலவரத்தை தூண்டும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.இவர்களின் செயற்பாடுகளுக்கு சரியான நேரத்தில் – உரிய தருணத்தில் தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது.

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி துறந்துள்ளனர்.

இது வரவேற்கத்தக்கது.தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முஸ்லிம் சமூகத்தினரை அரவணைத்து கொண்டே பயணிக்கும் என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்