கூட்டமைப்பு – மோடி ஞாயிறன்று சந்திப்பு!

அரசியல் தீர்வு, சிறுபான்மை மக்களின்
பிரச்சினைகள் குறித்து முக்கிய பேச்சு 

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.


இலங்கை வரும் மோடியை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர். இதன்போதே முக்கிய பேச்சு இடம்பெறவுள்ளது எனக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, நாளைமறுதினம் இலங்கை வருகின்றார். நாளை சனிக்கிழமை மாலைதீவு செல்லும் இந்தியப் பிரதமர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து திரும்பும் வழியில் கொழும்பில் தரித்துச் செல்வார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்தியப் பிரதமர் இலங்கை வருகின்றார். அவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ரவூப் ஹக்கீம் – ரிஷாத் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினருடன் சந்திப்பு  நடத்தவுள்ளார்.

அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இந்தியத் தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம், அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், ஐ.நா. தீர்மானம் மற்றும் இலங்கை – இந்திய விவகாரங்கள் தொடர்பில் முக்கிய பேச்சு இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்