இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடி சில மணித்தியாலங்களே நாட்டில் தங்குவார்!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மாலைத்தீவிற்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 11 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார்.

அங்கிருந்து அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்புக்கு வரவுள்ள அவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பளிக்கப்படும்.

அதனையடுத்து, இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் இந்தியப் பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதன் பின்னர், 3 மணியளவில் மீண்டும் அவர் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார். அதற்கமைய சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையே அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான பயண நிகழ்ச்சி நிரல் இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்