முஸ்லிம் சமூகத்திலிருந்து புதியத் தலைமைத்துவம் உருவாக வேண்டும் – ரத்தன தேரர்

முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதியத் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் கடந்த காலங்களில் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை நாடாளுமன்றில் கொண்டுவந்துள்ளோம்.

எனினும், இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன. எனவேதான், எம்மால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் ஸ்திரமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் நேரடியாக வலியுறுத்தியிருந்தோம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் வெற்றி பெறுமா என்பதைவிட, நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பதில்தான் இரண்டு தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கான சரியானத் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு இடங்களை வழங்கி, நாட்டில் இராணுவ முகாமொன்றை ஸ்தாபிக்க அனுமதியளித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட விரும்புகிறோம். இதனை தடுக்க வேண்டியமை எமது பாரிய பொறுப்பாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரை அரசியல் கொள்கையொன்று இல்லாதமை பெறும் குறையாக இருக்கிறது.

அரசியல்வாதிகளுக்கென்று கொள்கைகளை வகுக்க மதத்தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படாது.

நாடு குறித்து தற்காலிகமாக ஆட்சிபீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் தீர்மானிக்ககூடாது என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, புதிய நபர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவேண்டும். இப்போதுள்ள உறுப்பினர்கள் அன்றி, நாட்டை நேசிக்கும் நபர்கள் அந்த சமூகத்தில் இருந்து வர வேண்டும். இதனைத்தான் நாம் தற்போது எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்