முஸ்லிம்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம் -ஹிஸ்புல்லா

உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினத்தவர்கள் என்றும் தங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக்கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் தயாராகியுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்குப் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் தயாராகியுள்ளனர். அதற்கமைய அவர்கள் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைடுத்து, வசதியுடைய குடும்பங்களே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக்கூடாது.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. ஏனைய அனைவரும் அப்பாவிகள். தொழுகைக்குப் பின்னர் ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோன்று குரான் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்களும் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது ஜுப்பா ஆடையில் சௌதி அரேபியாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததற்காக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, மூன்று வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளையும் கடைகளையும் எரித்தவர்கள், வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம், எந்தக் காரணமும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே, கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான பணிகளை செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்காக பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு நாம் கூறவில்லை.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமை சாதாரணமானது அல்ல. எங்களைப் போன்று முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள், தமது பதவியைத் துறந்தது பெரிய விடயமல்ல. ஆனால், கபீர் ஹாசிம், ஹலீம், ரவூப் ஹக்கீம் போன்ற அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தமை மிகப்பெரிய விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்