முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கும் தமிழ்த் தலைமைகள்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் பாரிய குண்டுத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்டமையால் இலங்கை மட்டுமல்ல சர்வதேசமே அதிர்ந்த நிலையில் உள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வகிபாகமும் உண்டு என்று பலராலும் சந்தேகிக்கப்படுகின்றது. சிலர் விடுதலைப் புலிகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பையும் தொடர்புபடுத்திக்கூடப் பேசுகின்றார்கள். ஏன் நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய ரிஷாத் பதியுதீன்,  விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று தெரிவித்திருக்கின்றார். பயங்கரவாதிகள் என்றால் என்ன? அதன் அர்த்தம் புரிந்துதான் அவர் பேசினாரா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளதும் புலிகளினதும் கொள்கை நிலைப்பாடு என்ன? என்பதை முதலில் புலிகளைப் பங்கரவாதிகள் என்போர் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸூம் தமிழீழ விடுதலைப் புலிகளும்

ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் 8 இடங்களில் நடைபெற்றது. மத ஆராதனையின்போது இன்னொரு மதத்தைக் குறிவைத்து, சிறுவர்கள், முதியவர்கள், கற்பிணிகள், வயோதிபர் என எந்தப் பாகுபாடும் இன்றி முஸ்லிம் தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை உண்மையிலேயே ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்றே குறிப்பிடலாம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நோக்கம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் அரசை நிறுவவேண்டும் என்பதே.

நேற்றும் இப்பத்தியில் வரைகின்றபோது நான் முஸ்லிம் தலைவர்கள் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ஆற்றிய உரைகள், அவர்கள் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்குரிய தனிநாடாக நிர்வகிக்கவும் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை தகர்தெறிந்து முஸ்லிம் அரசு ஒன்றை கிழக்கில் நிறுவுவதற்கான அத்திபாரமிடுவதாகவே அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நோக்கம், பின்னணி என்பனவும் முஸ்லிம் தலைவர்களின் அந்த 2012 ஆம் உரையின் நோக்கம், பின்னணி என்பனவும் ஒன்றாகவே காணப்படுகின்றன.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் ஒரு கொள்கை நிலைப்பாடு இருந்தது. அவர்கள் சிங்கள பௌத்த மதத்தினருக்கு இந்த நாட்டில் எவ்வாறான உரித்து உண்டோ என்னென்ன சலுகைகளை அவர்கள் அனுபவிக்கின்றார்களோ, அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற சுயநிர்ணயம் எமது மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அவர்கள் இந்த மண்ணில் தமது இனம் கௌரவத்துடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழவேண்டும் என்பதற்காகப் போராடினார்கள். தமது இனத்தினுடைய விடுதலையை வேண்டிநிற்கும் ஓர் அமைப்பை எவ்வாறு பயங்கரவாதிகள் என்பது? ஐ.எஸ்.ஐ.எஸ். இனதும் தமிழீழ விடுதலைப்புலிகளினதும் நிலைப்பாடு ஒன்றா? ஐ.எஸ்.ஐ.எஸ். உலகம் முழுவதிலுமே இஸ்லாமிய அரசை நிறுவவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டவர்கள். மற்றைய மதங்களை அழிக்கவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. ஆனால், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு அவ்வாறானதல்ல. அவர்கள் தமிழ் மக்கள் செறிந்துவாழ்கின்ற வடக்கு – கிழக்கை மட்டுமே தமிழர் தாயகப் பகுதியாகக் கருதினார்கள். இந்த இரண்டு மாகாணத்தையுமே ஆழவேண்டும் என்று எண்ணினார்கள். இலங்கை முழுவதையும் தமதாக்கவேண்டும் என்றோ ஏனைய நாடுகளைக் கைப்பற்றவேண்டும் என்றோ அவர்கள் என்றைக்கும் சிந்தித்தமை கிடையாது. அவர்களின் போராட்டம் மதம் சார்ந்தது கிடையாது.

விடுதலைப் புலிகளின் போராட்ட காலம் இனவிடுதலைக்காக விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடிய நேரத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளாகவே சிங்கள இராணுவத்தினராலும் பொலீஸாராலும் நோக்கப்பட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ்  தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் இன்றும் சிறையில் வாடுகின்றார்கள். இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. அவசரகாலச் சட்டமும் ஐ.எஸ். தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் போடப்பட்டுள்ளது. இன்னமும் மழை விட்டும் தூவானம் விடாதமாதிரி இந்த தமிழ் பிரதேசங்கள் கலவரபூமியாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றன. மக்களுக்கு இயல்புநிலை ஏற்படவில்லை. பல ஏக்கர் காணிகள் இராணுவ வசம், காணாமற்போனோருக்கு முடிவு கிட்டவில்லை.

தமிழர்கள் மீது இவ்வாறு பல்வேறு அடக்குமுறைகள் தொடர்ந்தபோதும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் நாடாளுமன்றில் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து தமிழ்மக்களுக்கு எதிராக நாடாளுமன்றில் உருவாக்கப்பட்ட சகல சட்டங்களுக்கும் ஆதரவுகொடுத்து, தமது இனத்தை வளம்படுத்துவதை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்பட்டார்கள். தமிழ் மக்கள் நசுக்கப்பட்டபோது எந்தவொரு முஸ்லிம் தலைமையும் எமக்காகக் குரல் கொடுக்கவில்லை.

ஆனால், இன்று தமிழ்த் தலைமைகள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்காக வக்காலத்து வாக்குகின்றமைதான் தமிழ் மக்களுக்கு வேதனையை அளிக்கின்றது. எமக்கா முஸ்லிம் தலைமைகள் யுத்தகாலத்தில் எந்தக் குரலும் கொடுக்காதபோதும் – 2009 முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு நடைபெற்றபோது – எந்தக் குரலும் கொடுக்காத முஸ்லிம்களுக்காக இன்று எமது தலைமை முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாது, ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிமும் பாதிக்கப்படக்கூடாது என்றெல்லாம் நாடாளுமன்றில் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால், இன்றும் – நேற்றும் – ரிஷாத் நாடாளுமன்றில் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உரையாற்றியிருக்கின்றார். இதை எமது தமிழ்த் தலைமைகள் கைகொட்டிப் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்குப் பயந்து அவ்வாறு செயற்படுகின்றார்களா? அல்லது, முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்குகின்றார்களா? அல்லது, தமது பெருந்தன்மையைக் காட்டுகின்றார்களா? இதில் இவர்கள் எந்த ரகத்தினர் என வாசகர்கள் முடிவெடுக்கட்டும்.

– மனுநீதி-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்