உங்களை என்னால் மறக்க முடியாது – முல்லைத்தீவு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மைத்திரி!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மக்கள் 80 வீதமான வாக்குகளை எனக்களித்தனர். அதை நான் மறக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நான் இன்று மகிழ்ச்சியாகவே முல்லைத்தீவிற்கு வந்தேன். எனக்கு முன்னதாக 5 நிறைவேற்று ஜனாதிபதிகள் இருந்தனர்.

நான் 6வது ஜனாதிபதி. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மக்கள் 80 வீதமான வாக்குகள் எனக்களித்தனர். அதை நான் மறக்க மாட்டேன். அதற்கு எனது நன்றிகள்.

எனக்கு முன்னதாக 5 ஜனாதிபதிகள் இருந்தார்கள் என ஏன் சொன்னேன் தெரியுமா? முல்லைத்தீவிற்கு பலமுறை வந்த ஒரே ஜனாதிபதி நான்தான். மற்றைய ஜனாதிபதிகள் பல வருடங்கள் பதவியிலிருந்தபோதும், நான்கரை வருடம் ஜனாதிபதி பதவியிலிருந்த நானே வடக்கிற்கு அதிகமுறை வந்த ஜனாதிபதி.

முல்லைத்தீவில் மட்டுமல்ல, வடக்கிலும் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வறுமை.

இந்த மாவட்டத்தின் சனத்தொகை 1,25,000 இற்கும் குறைவானது. நாங்கள் இந்த மாவட்டத்திலே 1178 வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 1800 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

1178 வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்துள்ளோம். இந்த வேலைத்திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவராவது இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 68,000 குடும்பங்கள் இந்த திட்டங்களால் பலனடைந்துள்ளனர்.

இந்த பகுதிக்கு வந்த பின்னர் இங்குள்ள முக்கியமான பிரச்சனையொன்றை அறிந்துள்ளேன். உங்களுடைய காணி உறுதி யுத்தத்தில் அழிந்தன. காணாமல் போயுள்ளன. காணி உறுதி அத்தாட்சி பத்திரமில்லாததால் வங்கி கடனை கூட பெற முடியாதுள்ளது.

ஆனால் காணி வரைபடம் இருக்கலாம். உங்களிற்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாவிட்டால் கூட, வங்கி கடனை பெற விசேட வழியொன்றை உருவாக்கி தர தீர்மானித்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்