தெரிவுக்குழு முன் அதிகாரிகள் முன்னிலையாகவே வேண்டும்!

– சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு

“நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அதிகாரிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் முன்னிலையாகியே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் அதன் அனுகூலங்கள் என்ன என்பது அவர்களுக்குத்  தெரியும்.”

– இவ்வாறு சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இனிமேல் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையாக மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்த சூழ்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இந்த நிலைப்பாட்டை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.

“எந்தச் சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக நாடாளுமன்றம் செல்லாத ஒரு சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்ற செயற்பாடுகளில் தலையிடுவது சரியானதா?” எனவும் சபாநாயகர் அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது.

“நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்குக் கிடையாது. தெரிவுக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களாகச் சென்றவடைத் தடுப்பதற்காகவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனவும்  சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்