காற்றுடன் கூடிய மழை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்குமென என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்