முல்லைத்தீவில் ஆமையன்குளத்துக்கு சிங்களப் பெயர் சூட்டிய மைத்திரி!

தமிழ் மக்களின் பூர்வீக கிராமதில் அமைந்துள்ள ஆமையன் குளம் என்ற குளத்திற்கு ‘கிரிஇப்பன்வெவ’ என சிங்கள பெயர் சூட்டி, திறந்து வைத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. மகாவலி அபிவிருத்தி ‘L’ வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் இந்தக் குளம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் சிங்களவர்களால், விரட்டியடிக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவும் உருவாக்கப்பட்டு சிங்களமயமாக்கல் தற்போது முல்லைத்தீவு செம்மலை கிராமத்தை அண்மிக்கும் அளவுக்கு வந்துள்ளது.

ஒருபுறம் தமிழ் மக்களுக்காக அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளமை மகாவலி ஆக்கிரமிப்பாலும் சிங்கள மயமாக்கலினாலும் தொடர்ந்தது அநீதிக்குளாகிவரும் தமிழ் மக்கள் மனதில் விரக்திக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்