புதுவை மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு

புதுவை மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு-வைகோ இரங்கல்

 

புதுவை மாநில முன்னாள் முதல்வரும், தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு
உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஆர்.வி.ஜானகிராமன் அவர்கள் உடல்நலக் குறைவு
காரணமாக, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்கிற செய்தி கேட்டு
பெரிதும் துயரம் கொண்டேன்.
புதுவையின் நெல்லித் தோப்புப் பகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், புதுவை
மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், புதுவை மாநில முதலமைச்சராகவும்
பணியாற்றிய ஜானகிராமன் அவர்கள், மாநில வளர்ச்சிக்காகவும், புதுவை மக்களின்
முன்னேற்றத்திற்காகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவரது தொண்டின் சிறப்பை
பாராட்டக்கூடிய வகையில், 2005 ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அவர்கள், திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘பேரறிஞர் அண்ணா விருதி’னை வழங்கி கௌரவப்படுத்தினார்.
புதுவை மாநில தி.மு.கழகத்தின் பொருளாளராகவும், அமைப்பாளராக சிறப்பாகப் பணியாற்றிய
ஜானகிராமன் அவர்கள் ‘உழைப்பின் சின்னம்’ என்று டாக்டர் கலைஞர் அவர்களால் பாராட்டப்
பெற்றவர்.
ஜானகிராமன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் புதுவை மாநிலத்தில் வலுப்பெற
முனைப்புடன் பாடுபட்டவர் ஆவார். என் மீது அளவற்ற பாசம் கொண்டு, பலமுறை தன்
இல்லத்திற்கு அழைத்து விருந்து உபசரித்தும், கழக வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளில் என்னை
அழைத்து உரையாற்றச் செய்தும் மகிழ்ச்சிகொண்டவர் ஆவார்.
புதுவை மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைந்திடவும், டாக்டர் அம்பேத்கர்
மணிமண்டபம் அமைந்திடவும், அரசு கோப்புகளை தமிழ் மொழியில் உருவாக்கிப்
பயன்படுத்தவும் மாண்புமிகு ஜானகிராமன் அவர்களின் அரசு காரணமாக இருந்தது.
கடுமையான உழைப்பினாலும், சிறந்த அணுகுமுறையாலும், தி.மு.கழக வளச்சிக்கும், புதுவை
மாநில வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி மறைந்துள்ள ஜானகிராமன் அவர்களை இழந்து துயருற்று
இருக்கும் தி.மு.கழக தோழர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி
தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த ஆர்.வி.ஜானகிராமன் அவர்களின் இறுதி நிகழ்வில் கழகத்தின் அமைப்புச் செயலாளர்
ஆ.வந்தியத்தேவன் அவர்கள், புதுவை மாநில அமைப்பாளர் கபிரியேல் மற்றும் மறுமலர்ச்சி
தி.மு.கழக தோழர்களுடன் சென்று பங்கேற்பார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்