மைத்திரியின் எச்சரிக்கை – அமைச்சரவைக் கூட்டம் இரத்து?

வாராந்தம் கூடும் அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதும் உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி கேட்டிருந்தார். அத்தோடு தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

எனினும் நேற்று விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்ட போதிலும் இன்று தெரிவுக்குழுவின் அமர்வு தொடரவுள்ளது.

இதன்மூலம் மீண்டும் நிறைவேற்றதிகாரத்திற்கும் சட்டவாக்க நாடாளுமன்றத்திற்குமிடையில் முறுகல் தோன்றியுள்ளது. இதன் காரணமாகவே இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக நடக்கும் தயார்படுத்தல் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தெரிவுக்குழு விசாரணை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்தே முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர்கள் குழுவொன்று விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்