தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் ஆதரவு – பகிர் தகவலை வெளியிட்டார் அசாத் சாலி

2005 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பொலிஸார் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி சாட்சியம் வழங்கினார்.

இதன்போதே தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பொலிஸார் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2017 ஆம் ஆண்டு, சஹ்ரானினால் 120 வீடுகள் காத்தான் குடியில் தீக்கிரையாக்கப்பட்டன. பாரம்பரிய முஸ்லிம் மக்களின் வீடுகள் இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டும் ஒரு பொலிஸ் கூட சென்று நடவடிக்கை எடுக்கவில்லை.

பின்னர், சஹ்ரானை கைது செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் பொலிஸார் அவரை கைது செய்யவில்லை.

கைது செய்ய முற்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை எடுத்துக்கொண்டால், 2005 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன்தான் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த இரண்டு தரப்பும் ஒன்றாகவேதான் வேலை செய்துள்ளன. இதனை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன். இதனால், முஸ்லிம் ஒருவருக்கு முறைப்பாடளிக்கக்கூட முடியாத நிலைமை காணப்பட்டது.

சிலர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்கெதிராக நான் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றில் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தேன். இதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்